சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை - மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு குற்றச்சாட்டு!
சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை என திமுக எம்.பி. டாக்டர். கனிமொழி சோமு மாநிலங்களவையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் இன்று (டிச.9) நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திமுக எம்.பி-க்கள் சில கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேலைவாய்ப்பு பயிற்சியில் சொதப்பும் மத்திய அரசு - பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு கேள்வி
கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக வங்கிகளால் நடத்தப்படும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) தொழில்சார்ந்த போதிய அறிவுடன் பயிற்சி அளிப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு மக்களவையில் கோரியுள்ளார். இப்பிரச்சினையை தீர்த்து தற்போதுள்ள தொழில்துறைக்கு ஏற்ப பயிற்சிகளை புதுப்பிக்க எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் இத்திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிதியின் விவரங்களையும் அவர் தனது நாடாளுமன்ற அறிக்கையில் கேட்டுள்ளார்.
- எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை - திமுக எம்.பி. கே. ஆர். என். ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு
அத்தியாவசியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதை குறிப்பிட்டு திமுக எம்.பி. கே. ஆர். என். ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர், நுகர்வோருக்கு பொருட்கள் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் தொடர்ந்து கண்காணிக்கவும் அவை லாபம் ஈட்டும் நோக்கில் பதுக்கப்படுகிறதா என அடையாளம் காணவும் வேண்டும் என கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்திடுக! - திமுக எம்.பி. பி. வில்சன் கோரிக்கை
உரங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான நிலைக்குழு பரிந்துரையின்படி மூலப்பொருட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று திமுக எம்.பி. பி. வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இறக்குமதியை குறைக்கவும் அதே நேரத்தில் தேவையை பூர்த்திசெய்யவும் உள்நாட்டில் உர உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையின் விவரங்கள் வெளியிடவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
- சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை - திமுக எம்.பி. டாக்டர். கனிமொழி சோமு குற்றச்சாட்டு
தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு போதிய நிதியுதவி அளித்துள்ளதா என்று டாக்டர் கனிமொழி சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவர்களை பணியில் அமர்த்த உருவாக்கியுள்ள திட்டங்களின் விவரங்கள் என்ன என்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆஷா பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்களை பணியமர்த்துவதற்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சிறப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
- எல்ஐசி ஏஜென்ட்களின் கமிஷன் உயருமா? - திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி
ஐஆர்டிஏஐ பரிந்துரைத்திருந்த போதிலும்,1938ல் இருந்து இன்றுவரை எல்.ஐ.சி முகவர்களின் கமிஷனை அதிகரிக்கவில்லை என முகவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று திமுக எம்.பி. பி. வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். எல்.ஐ.சியால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளாபேக் பாலிசி ஏஜெண்டுகளின் முதல் ஆண்டு கமிஷனைக் 25% குறைத்துள்ளது, மேலும் பாலிசி சரணடைதல்களுக்கு முகவர்கள் பொறுப்பேற்க வேண்டும், கமிஷனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்த பாலிசி அறிமுகப்படுத்துவதற்குமுன் எல்ஐசி முகவர்களிடம் இதுகுறித்து ஏதேனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதா? என்றும் கேட்டுள்ளார்.
- சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை என்ன? - பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி கேள்வி
பிற நாடுகளின் உதவியுடன் இணையத்தில் நடக்கும் சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் மற்றும் பல கணினி சார்ந்த குற்றங்களை கட்டுப்படுத்த மத்தியஅரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என பொள்ளாச்சி திமுக எம்.பி. கே. ஈஸ்வரசாமி மக்களவையில் கேட்டுள்ளார். இது தொடர்பாக நாட்டிலுள்ள காவலர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் பயிற்சி அளிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தால் அதன் விவரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார்.