தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக இன்று தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நிறுவப்பட்ட நிறுவனமும் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். இப்படி வாங்கும் தேர்தல் பத்திரங்களை அவர்களின் ஆதர்சன அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது
- தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
- தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது.
- தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்தின் 19(1)(a) -க்கு எதிரானது.
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.
- அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X தள பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. மேலும், இது வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும், இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கான ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது. அதோடு நீதித்துறை மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.