தமிழ்நாடு வேளாண் பல்கலை. நுழைத்தேர்வு திடீர் ரத்து! துணைவேந்தர் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து பல்கலை. துணைவேந்தர் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வினை மாணவர்கள் எழுதி முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருக்கும் நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திடீரென மாணவர்கள் எழுதிய நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜூலை மாதமே தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் எப்போது நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்? அந்த தேர்வு நடைபெற்று முடிந்து, எப்போது கல்லூரிகளில் சேர்வது? என்பது குறித்த சந்தேகத்தை மாணவர்களிடையே உருவாக்கி உள்ளது.
இதனிடையே தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார். மென்பொருள் பிரச்சினையால் எற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் நுழைவு தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
தாமதமின்றி செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் என்றும், மாணவர்கள் சேர்க்கையும் தாமதமின்றி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.