"தகைசால் தமிழர் விருதை இனி தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும்" - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த தகைசால் தமிழர் விருது நிகழாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, தமிழைப் போற்றும், மொழிக்காக பணியாற்றி வரும் அறிஞர்களும் பெருமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 35 பிரிவுகளில் விருதுகள் வழங்கி அறிஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. புதிதாக இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ், 260 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெருமையையும், தமிழையும் போற்றி வருவோரில், ஒருவருக்கு ஆண்டுதோறும் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் துறையின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த இந்த விருதானது, நிகழாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
தமிழறிஞர்கள் போற்றப்படுவது மட்டுமின்றி, அவர்களது படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையருக்கு ரூ.2.85 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது. சாகித்ய அகாடமி, செம்மொழித் தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 6 அறிஞர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்தைக் கடந்தும், தமிழ் வளர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஒடிசா மாநிலம், புவனேஷ்வரம் ஆகிய இடங்களில் தமிழ் வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும், திருக்குறளை மாணவர்களும் அறிந்திட வசதியாக, திருக்குறள் முற்றோதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. பெரியாரின் படைப்புகளை மின்னூல்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரிக்க ரூ.5 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ் மொழி தொடர்பாக அயல்நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. ராபர்ட் கால்டுவெல் எழுதிய நூலும், கிரேக்க காப்பியங்களான ஓமரின் இலியட், ஒடிசி போன்ற நூல்களும் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.