"தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்" - ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!
"தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்கக் கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முகலாய பேரரசரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜின் பிரிவை அடுத்து, அவருக்காக எழுப்பிய பிரமாண்ட நினைவிடம் தான் தாஜ் மஹால். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தாஜ் மஹாலில் உரூஸ் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 6 முதல் 8ம் தேதி வரை உரூஸ் விழ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரூஸ் விழா என்பது நினைவு தினத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதாகும். சூபி துறவிகளின் நினைவாக இந்த உரூஸ் விழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்துமகா சபா அமைப்பினர் “ஆக்ரா நகர வரலாற்றாசிரியர் ராஜ் கிஷோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிக்கொணர்ந்த தகவலின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால் வளாகத்தில் 'உரூஸ்' கொண்டாட்டம் மற்றும் 'தொழுகை' ஆகியவற்றிற்கு முதலில் யார் அனுமதித்தது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய தொல்லியல் துறை முகலாயர்களோ, பிரிட்டிஷ் அரசோ அல்லது இந்திய அரசோ என யாரும் தாஜ்மஹாலில் 'உரூஸ்' கொண்டாட்டத்தை அனுமதிக்கவில்லை," என்று அவர் கூறினார்.