டி20 உலகக் கோப்பை - இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற தமிழர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரும் இடம்பெற்றிருந்தார்.
பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த 29-ம் தேதி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.
இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்தவர் காஷ்மீரைச் சேர்ந்த துடிப்பான இளம் ஆடை வடிவமைப்பாளரான ஆகிப் வானி. இவர் தலைமையிலான குழுதான் இந்திய அணியின் ஜெர்சியை பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வடிவமைத்திருந்தது. ஆகிப் வானி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவில் முக்கிய நபராக இருந்தவர் நிகில் ஷங்கர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளராவார்.
தற்போது இந்த குழு தான் ஒலிம்பிக் போட்டிக்கான ஜெர்சியையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளாரான நிகில் ஷங்கர் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரான பிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் விஜய்சங்கர் ராமச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.