டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலபரீட்சை!
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற கூடிய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இந்த கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வென்றால் அரையிறுதிக்குள் நுழையும். தோல்வி அடைந்தாலும் கூட அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். ஆனால் மிக மோசமாக தோற்று ரன்ரேட் குறைந்து விடக்கூடாது.
ஆஸ்திரேலியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தினால்..., அதேபோல அடுத்து நடைபெற கூடிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றால், இந்தியாவின் ரன்ரேட் 3வது இடத்துக்கு சரிந்து போட்டியை விட்டு வெளியேற நேரிடும்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்தியாவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் வங்காளதேச அணியை வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குள் நுழையும். மாறாக ஆஸ்திரேலியா தோற்று, ஆப்கானிஸ்தான் வென்றால் ஆஸ்திரேலிய அணி வெளியேறும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19ல் இந்தியாவும், 11ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.