டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்து - அமெரிக்கா இன்று மோதல்!
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
2 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவதுடன், ரன் ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தோற்றால் வெளியேற வேண்டியது வரும். புள்ளி கணக்கை தொடங்காமல் இருக்கும் அமெரிக்க அணி தனது பிரிவில் கடைசி இடத்தில் இருப்பதுடன், அரைஇறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.