"டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு சாதகமாக நடத்தப்படுகிறது" - முன்னாள் இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு சாதகமாக நடத்தப்படுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்திருந்தார் . ஓமர்சாய் மட்டுமே அந்த அணிக்காக இரட்டை இலக்கை தொட்டார். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதுபோக, ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது.
இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்த அரையிறுதிப் போட்டி கயானாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒட்டு மொத்த தொடருமே இந்தியாவுக்கு சாதகமாகவும் மற்ற அணிகளுக்கு பாரபட்சமாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.