டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி!
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர்.
விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். அதேசமயம், கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், ரிஷப் உடன் அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்தார்.
அக்சர் பட்டேல் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னிலும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். ரிஷப் பண்ட் 31 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்ஷ்தீப் சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் நசீம் ஷா, ஹரிஷ் ரல்ப் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். கேப்டன் பாபர் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்துவந்த உஸ்மான் கான் 13 ரன்னிலும், பகர் சமான் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடக்க வீரர் ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஷபாஸ் கான் 4 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.