டி20 உலகக்கோப்பை: இந்தியா - அமெரிக்கா இன்று பலப்பரீட்சை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 22 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட போதிலும் எந்த அணியும் சூப்பர் 8 சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.
மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்க அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவையும், அடுத்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. 4 புள்ளியுடன் உள்ள அமெரிக்கா அடுத்த சுற்றை எட்டுவதற்கும் இன்னும் ஒரு வெற்றி தேவை. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - அமெரிக்கா நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.