டி20 உலக கோப்பை : 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!
உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் டி20 உலக கோப்பையின் 5வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் அணி மற்றும் உகாண்டா அணி மோதின.
இதில், டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது.ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 154 ரன்களை குவித்தனர். இப்ராகிம் ஜத்ரன் 70 ரன்களில் ஆட்டமிழக்க, குர்பாஸ் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஜிபுல்லா ஜத்ரன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படியுங்கள் : ஸ்ட்ராங் ரூம் சாவி வராததால் அம்பாசமுத்திரத்தில் பூட்டு உடைப்பு – முகவர்கள் வாக்குவாதம்!
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய குல்பதீன் நைப் 4 ரன்கள், அஸ்மதுல்லா உமர்சாய் 5 ரன்கள், முகமது நபி 14 ரன்கள், ரஷீத் கான் 2 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ரோனக் படேல் மற்றும் ரோஜரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் ஆப்கன் பவுலர் ஃபசல்ஹக் ஃபரூக்கி. தொடர்ந்து உகாண்டா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து வந்தனர். 13-வது ஓவரை ஃபரூக்கி வீசினார். அதில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 16 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது உகாண்டா. இதன் மூலம் 125 ரன்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.