டி20 போட்டி : இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று (ஜூலை 6) நடைபெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே – இந்தியா அணிகள் முதலாவது டி20 போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இதையும் படியுங்கள் : பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் - உலகம் முழுவதும் ரூ.800 கோடி வசூல்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரரான அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இதில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும், ரியான் பராக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் இறங்கிய ரிங்கு சிங் டக் அவுட் ஆகி வெளியேறினார். துருவ் ஜூரல் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே சுப்மன் கில் 31 ரன்களில் அவுட் ஆனார். இவ்வாறு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.