சிரியா : தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் கால சிலைகள் திருட்டு
சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு போர் தொடக்கம் காரணமாக மூடப்பட்டது.
2018ல் இந்த அருங்கட்சியகம் பகுதியளவு திறக்கப்பட்டாலும் கிளர்ச்சியாளர்களால் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், இந்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையில் இந்த சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர் ஆறு சிலைகள் திருடப்பட்டதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
மற்றொரு அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டு நடந்ததாகவும், திங்கள்கிழமை அதிகாலையில், அருங்காட்சியத்தின் கதவுகளில் ஒன்று உடைக்கப்பட்டு, ரோமானிய காலத்தைச் சேர்ந்த சிலைகள் காணாமல் போனது தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். இந்த திருட்டு தொடர்பாக அரசாங்கம் தரப்பில் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடாததால், அந்த இரு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.