திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான, உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் நாள்தோறும் யாகசாலை பூஜை நடைபெற்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு பல்வேறு வகையான அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்ட நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோயில் சண்முக விலாஸ் மண்டபம் பல வண்ண மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரோஜா பூ, செவ்வந்தி, மாசி பச்சை, செண்டு பூ, ஊட்டி ரோஸ் வகைகள் மற்றும் வாடாமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல வகையிலான சுமார் 1000 கிலோ வண்ண மலர்களால் பிரத்யேகமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.
இந்த விழாவை முன்னிட்டு, பக்தர்களின் நலனுக்கான நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் பக்தி youtube சேனலில் மாலை 3 மணி முதல் சிறப்பு நேரலை செய்யப்படுகிறது. மேலும் பக்தர்கள் நிகழ்ச்சிகளை காண்பதற்காக கோயில் வளாகத்தில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் 6 அகன்ற எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளது.