ராமர் பாலம் தொடர்பான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமானது சம்பந்தப்பட்ட துறையிடம் உரிய மனுவை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி தரப்பில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சுப்ரமணியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது
அம்மனுவில் ”உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசிடம் ராமர் பாலம் தொடர்பாக ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த ஒரு முடிவையும் இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை எனவே உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
அப்போது ஆஜரான மனுதாரர் சுப்பிரமணியசாமி, ”ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் தான் ஒரு மனுவை அளித்துள்ளதாகவும் அந்த மனு மீது விரைந்து ஒரு முடிவை எடுத்து மத்திய அரசானது அறிவிக்க வேண்டும். அதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்
இதனையடுத்து நீதிபதிகள் சுப்பிரமணிய சாமியின் வழக்கில் மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.