நேதாஜியை "தேசத்தின் மகன்" என அறிவிக்க கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நேதாஜியை "தேசத்தின் மகன்" என அறிவிக்க கோரிய வழக்கை மத்திய அரசின் கொள்கை முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தேசத்தின் மகன் என அறிவிக்க கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் "அழியாதவர்கள்", அவர்களுக்கு நீதித்துறை உத்தரவுகள் மூலம் அங்கீகாரம் வழங்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த பினாக் பானி மொஹந்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பிறந்தநாளை "தேசிய தினமாக" மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அவரை "தேசத்தின் மகன்" என்று அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போன்ற போராளிகளின் பங்களிப்பை பாராட்டுவதற்காக அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவரைப் போன்ற தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எந்த நீதிமன்றமும் அப்பாற்பட்டது. அவர்கள் சிறந்த மனிதர்கள் என்பதை நாங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக் கொள்ளும் என்று நீதிபதி காந்த் தீர்ப்பளித்தார்.
மேலும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உரிய அங்கீகாரம் வழங்குவதற்கு நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மனுதார மொகந்தி கூறியபோது, மனுதாரர் விரும்பும் அறிவிப்புகள் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டவை என்று நீதிமன்றம் பதிலளித்தது.