புதிய அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு -கொல்கத்தா வழக்கில் #SupremeCourt அதிரடி!
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கையை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இளம் மருத்துவர்கள் செப்.10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. அவ்வாறு மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சாா்பில் துறை சாா்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்தனர். ஆனால் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் அறிவித்தனர். போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள் : தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் – உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் #MKStalin
இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.