#Engineering படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு... எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2024-25ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2024 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களும் துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் செப்.4ம் தேதி விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள மாணவர்கள் https://www.tneaonline.org (or) https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு விவரங்கள் மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.