இன்று தொடங்குகிறது சூப்பர் 8 சுற்று: தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா பலப்பரீட்சை!
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா இன்று மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகளும் குரூப் 2ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
அதன்படி, சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும், மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க அணி வீரர்கள்: மொனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜேம்ஸ் (துணை கேப்டன்), அலி கான், கோரி ஆண்டர்சன், ஆண்ட்ரீஸ் கவுஸ், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, நிதிஷ் குமார், மிலிந்த் குமார், சவுரவ் நேத்ரவால்கர், நிசர்க் படேல், ஷயன் ஜகாங்கீர், ஸ்டீவன் டெய்லர், ஷேட்லி வான்.