3-வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்வு மையத்தில் இணைந்தார். 2006, 2012ல் இரண்டு முறை விண்வௌிக்கு சென்றுள்ளார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். இந்நிலையில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறையாக விண்வௌி செல்ல திட்டமிட்டிருந்தார். அவருடன் மேலும் 2 நாசா வீரர்கள் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
கடந்த மே 7ம் தேதி அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையத்தில் இருந்து புறப்பட தயாரான ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 90 நிமிடங்களுக்கு முன் அதன் பயணம் ரத்தானது.இதையடுத்து ஜூன் 1-ம் தேதி மீண்டும் ஸ்டார்லைனரின் விண்வௌி பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி கவுன்டவுன் தொடங்கி 3 நிமிடம் 50 நொடிகளில் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்டார்லைனரை ஏவுவதில் 2ம் முறை தடை ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறை விண்வெளிக்கு செல்லும் திட்டம் ரத்தானது.
இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றார்.புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில், சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா வீரர் பேரி வில்மோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்குகிறார்.
இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்திய நேரப்படி இன்று (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் அடையும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இந்த சோதனை வெற்றி அடைந்தால் ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தப்படியாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் 2வது நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்லைனர் பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.