சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்!
விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் சென்றார்.
இவர்கள் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். இதன்மூலம் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் சென்ற முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார்.
இதுகுறித்து அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது;
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தின் 5 இடங்களில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதன் 28 உந்து என்ஜின்களில் 14 என்ஜின்களில் பிரச்னை உள்ளது. எனவே, சுனிதா வில்லியம்ஸும் அவருடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள பட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.