தென் மேற்கு பருவ காலத்தில் சுட்டெரிக்கும் வெயில்! - தமிழ்நாட்டில் 8 இடங்களில் சதம் அடித்தது!
தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் இன்று சதம் அடித்த வெயிலால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையிலும், சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அப்படியே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 7 இடங்கள் மற்றும் காரைக்காலில் 1 இடத்தில் என 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பைடன், ஸ்டார்மரை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்த பிரதமர் மோடி!
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36°F வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கரூர் பரமத்தியில் 100.4°F, மதுரை நகரம் 103°F, பாளையங்கோட்டை, நாகையில் 101.48°F, தஞ்சாவூரில் 102.2°F, திருச்சியில் 100.94°F வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும் காரைக்காலிலும் 100.2°F வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. மதுரையில் இன்று வெயில் வாட்டி எடுத்த நிலையில், வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.