தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருந்ததால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிதிருந்தது.
இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.