“கோடையில் கொண்டாட்டம்” - சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பு வெளியானது!
திரையரங்குகளில் சமீபகாலமாக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ரீ ரிலீஸாகிவருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ரஜினியின் ‘முத்து’ , விஜயின் ‘கில்லி’, தனுஷின் ‘3’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரீ ரிரிலீஸானது. இப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதில் விஜய்யின் கில்லி திரைப்படம் மட்டும் ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் - ஜெனிலியா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சச்சின்’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் அதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெருமளவில் புரமோசஷன் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோடையில் கொண்டாட்டம்” என்று குறிப்பிட்டதோடு ‘சச்சின்’ திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் கோடையில் இப்படம் ரீ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.