பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 5 சீனர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று (மார்ச் 26) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐவர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்துவரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கவும், அதேபோல் கடல் வழி போக்குவரத்தை ஏற்படுத்தி சீன துறைமுகங்களை உலக நாடுகளின் பிற துறைமுகங்களுடன் இணைக்கவும், தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் கொண்டுவரப்பட்டது.
சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக கைபர் பக்துன்கவா பகுதியில் சீனப் பொறியாளர்கள் பாகிஸ்தான் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தசு என்ற இடத்தில் அணை கட்டும் திட்டம் நடந்து வருகிறது. இதனைக் குறிவைத்து பலமுறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இன்று நடந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பொறியாளர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மாகாண காவல்துறை தலைவர் முகமது அலி காண்டாபூர், “பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தசு முகாமுக்கு, சீன பொறியாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது தற்கொலை படையைச் சேர்ந்தவர் மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்” தெரிவித்துள்ளார்.