சென்னையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென பெய்த கனமழை; இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி...
திடீரென மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மிதமான மழை பெய்தது. நள்ளிரவு நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குறிப்பாகச் சென்னை ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், கே கே நகர், ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திடீரென மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மெட்ரோ ரயில் பாலத்திற்குக் கீழே ஒதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.