பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்.. தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!
தருமபுரி மக்களைத் தொகுதியின் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவருக்கு பதில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று காலை மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை பாமக அறிவித்தது. அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் ம.திலகபாமா, அரக்கோணத்தில், வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், கடலூரில் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை மற்றும் விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பின்பு தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான போட்டியில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் தருமபுரி தொகுதியில் அவரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என பாமக தரப்பில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு தர்மபுரி தொகுதியில் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.