மம்மூட்டி - ஜோதிகாவின் 'காதல் தி கோர்' திரைப்படத்திற்கு 2 நாடுகளில் தடை!
காதல் தி கோர் படத்தின் கதை அம்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக சொல்லி, கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் வருகிற நவ.23 ஆம் தேதி வெளியாகிறது. அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்று விட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.
ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிடுகிறார்.
இந்தக் குழப்பங்களிலிருந்து ஜார்ஜ் எப்படி மீள்கிறார், தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது காதல் - தி கோர்.
வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில், இந்த காதல் தி கோர் படத்தின் கதை அம்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக சொல்லி, கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் திட்டமிட்டபடி நவம்பர் 23ம் தேதி இந்த படம் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே இந்திய மொழிகளில் உருவான சில படங்களுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .