“வினேஷ் போகத் போல மாணவர்கள் வெற்றியை நோக்கி ஓட வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“வினேஷ் போகத் போல வெற்றியை இலக்காக கொண்டு மாணவர்கள் ஓட வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை அரசு கலை கல்லூரியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“இந்த கல்லூரியில் நுழைந்தவுடன் மாணவராகிய நீங்கள் கொடுத்த எனர்ஜி சிறப்பாக இருந்தது. நேற்றே உங்கள் வங்கி கணக்கிற்க்கு பணம் சென்று விட்டது. வரலாற்றில் என்றும் பெயர் சொல்லும் திட்டமாக இந்த திட்டம் இருக்கும். கோவை மக்கள் அன்பான, சேவை குணம் கொண்ட மக்கள். அப்படிப்பட்ட ஊரில் இந்த திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி.
8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சிக்கு செல்லும் மாணவர்களும் இத்திட்டதால் பயனைடைவார்கள். உங்கள் தந்தையாக இந்த திட்டத்தை வழங்கியுள்ளேன். இந்த திட்டத்தை தொடர்ந்து கவனிப்பேன். அரசு கலை கல்லூரி முதல்வர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் இந்த கல்லூரி வளாகத்தில் விடுதியும், கலையரங்கமும் கட்டித்தரப்படும்.
மல்யுத்தத்தில் வினேஷ் போகத் வாழ்க்கையில் எப்படி தடைகளை சந்தித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதை உடைத்து இன்று அனைவராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறார். அதுபோல் வெற்றி என்ற நோக்கை அடிப்படையாக கொண்டு ஓட வேண்டும். தொடர்ந்து நீங்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.