"உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்" - உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவருக்கு மருத்துவத் தொழிலுக்கான தகுதித் தோ்வெழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவர் உக்ரைனில் மருத்துவம் படித்த தனக்கு தகுதித் தோ்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "உக்ரைனில் உள்ள ஓா் மருத்துவக் கல்லூரியில் 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூனில் முடித்தேன்.
இந்தியாவில் மருத்துவா் தொழிலை அங்கீகரிக்க இளநிலை மருத்துவப் பட்டதாரி கல்வி வாரியம் தகுதித் தோ்வு நடத்தும். இந்தத் தோ்வை எழுத நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், நான் 17 வயது நிறைவடைவதற்கு 11 நாள்களுக்கு முன்னதாகவே எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்ததாகக் கூறி, தேசிய மருத்துவ ஆணையம் எனது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதை ரத்து செய்து, நான் தகுதித் தோ்வில் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், "மனுதாரா் ஏற்கெனவே எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டாா். அந்தப் படிப்பை புதிதாக படிக்கக் கோரவில்லை. அவர் தகுதித் தோ்வு எழுத விரும்புகிறாா். 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புவோா் நீட் தோ்வு எழுத வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு உக்ரைனில் தன்னுடன் படித்த இருவருக்கு மருத்துவத் தொழிலுக்கான தகுதித் தோ்வு எழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது" எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வாதங்களை கேட்ட நீதிபதி, "மனுதாரா் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டுமெனில் நீட் தோ்வு எழுதுவதுடன், வயது வரம்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படிக்கத் தகுதித் தோ்வு எழுத வேண்டுமா?. அவா் வெளிநாட்டில் 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் விண்ணப்பத்தை தேசிய மருத்துவ ஆணையம் நிராகரித்தது ரத்து செய்யப்படுகிறது. அவா் இந்தத் தோ்வை எழுத தேசிய மருத்துவ ஆணையச் செயலா் அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.