பட்டமளிப்பு விழாவில் ‘ஜெய் சியா ராம்’ என கோஷமிட்ட மாணவர் - வைரலாகும் வீடியோ!
இங்கிலாந்து லெய்செஸ்டர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவர் ஒருவர் ‘ஜெய் சியா ராம்’ என கோஷம் எழுப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலையை ஜன. 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டம் வாங்குவதற்காக வந்த மாணவர் ஒருவர் ‘ஜெய் சியா ராம்’ என கோஷம் எழுப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பட்டமளிப்பு உடை அணிந்த மாணவர், மேடைக்கு செல்லும் போது ஆசிரியரின் கால்களை தொட்டு வணங்குகிறார்.
பின்னர் அவர் பட்டம் பெற செல்வதற்கு முன்பாக மேடையிலேயே ‘ஜெய் சியா ராம்’ என முழக்கம் எழுப்புகிறார். இந்த காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் மாணவரின் கலாச்சாரம் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள் எனவும், மேலும் சில பயனர்கள் மானவரை பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், பல பயனர்கள் அவரது செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.