"ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - ரயில்வே அமைச்சர் #AshwiniVaishnaw எச்சரிக்கை!
ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அண்மையில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தண்டவாளங்களில் சிலிண்டர், டெட்டனேட்டர்களை வைத்து ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சித்தனர். இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரயில்களை கவிழ்க்க சதி நடந்திருப்பது ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் நகரில் 'கவச்' எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு கட்டமைப்பின் திறனை ஆய்வு செய்வதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜெய்ப்பூர் சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்கள் கடமையாகும். ரயில்களை கவிழ்க்க முயற்சிக்கும் சதித் திட்டங்களை முறியடிப்பதற்காக மாநில அரசுகள், காவல் துறைத் தலைவர்கள், மாநில உள்துறைச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் என்ஐஏ-வும் பங்கேற்றுள்ளது. ரயில்வே நிர்வாகமானது ரயில்வே பாதுகாப்புப் படையுடனும் மாநில காவல் துறையுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது."
இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.