"நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - மாயாவதி வலியுறுத்தல்!
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.
இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி சிக்கந்தருடன் தோ்வா்கள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோரும் கைது செய்யயப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.