தெருநாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வெறிபிடித்த தெருநாய்கள் கடிப்பதால், இறப்பை ஏற்படுத்தும் தீவிர தொற்று நோயான ரேபிஸ், பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
காடுகளில் வாழும் சிலவகையான நரி, ஓனாய், வவ்வால்கள் போன்ற வனவிலங்குகள் மற்றும் வீட்டு விலங்கான நாய் போன்றவற்றின் உடலில் வழக்கமாக வாழும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த விலங்குகள் நேரடியாக கடிப்பதாலோ அல்லது, அந்த விலங்குகளால் கடிபட்ட விலங்கள் கடிப்பதாலோ எச்சில் வழியே பரவுவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோயானது மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய்கள் மூலமே பரவுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மனித உடலுக்குள் நுழையும் இந்த வைரஸ், 5 ஆண்டுகள் வரை செயல்படாமல் இருந்துவிட்டு அதன் பின்னர் கூட தாக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எச்சில் வழியாக பரவி ரத்தத்தில் கலக்கும் இந்த வைரஸ் நோய் மூளை அழற்சியை ஏற்படுத்துவதாகவும், மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, பின் மூளையையும் நேரடியாக பாதிப்பதால் மரணம் விளைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை எளிதாக பாதிக்கும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த தெருநாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கும் பரவி கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள் முற்றிய நிலை நியூராலாஜிக்கல் எனப்படுகிறது. இந்த நிலையின்போது வைரஸ் மூளையழற்சியை ஏற்படுத்தி, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த சமயத்தில் கவலை, குழப்பம், மயக்கம், பிரம்மை, ஹைட்ரோஃபோபியா (தண்ணீரால் பயம்), தூக்கமின்மை, தசை வலிகள், விழுங்குவதில் சிரமம், ஏரோஃபோபியா (காற்றால் பயம்) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கு ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி, வயிற்றுக்கோளாறு, வயிற்று வலி, தசை வலிகள் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவை தானாகவே குணமடைந்துவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.