"தமிழ்நாட்டில் 1000 தடுப்பணைகள் கட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் #DuraiMurugan உறுதி
தமிழ்நாட்டில் வரும் ஆண்டில் 1000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
1. சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கோரிக்கை
மதுரை தெற்கு தொகுதி கிருதுமால் நதி, அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை தூர்வார வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்
கிருதுமால் நதி சீரமைப்பு பணிக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். மதுரை அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் உள்ளிட்டவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றை தூர்வார மாநகராட்சியை அணுகவும்.
2. சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி கோரிக்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர் கால்வாயை தூர்வார ரூ.69 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் செல்லூர் கால்வாயையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் துரை முருகன் பதில்
மதுரை மாவட்டம் செல்லூர் கால்வாயை தூர் வார முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.11 கோடியை ஒதுக்கி உள்ளார். முதலமைச்சர் அறிவித்தால் நான் விரைவில் நடவடிக்கை எடுப்பேன். இதுவரை 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வரும் ஆண்டில் 1000 தடுப்பணைகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
3. சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கோரிக்கை
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூரில் உள்ள ஆறுகளின் கொள்ளளவை அதிகரித்து கரைகளை வகைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். காமாட்சிபேட்டையில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் பதில்
சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் விடுத்துள்ளது நல்ல கோரிக்கை. அரசு இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.
4. சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி
நாங்குநேரி பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. நாங்குநேரி பெரியகுளத்தை தூர் வார வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் பதில்
சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் கோரிக்கையை நான் நன்கு அறிவேன். இவரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது.
5. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து ஏரிகளும் குளங்களும் தூர்வாரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 ஆயிரம் ஏரிகளில் தூர்வாரப்பட்டது. மீதம் உள்ள 8 ஆயிரம் ஏரிகளை தூர் வாரினால் மழைக்காலங்களில் மழைநீரை சேமிக்க முடியும்.
துரைமுருகன் பதில்
குடிமராமத்து என்பது ஒரு நல்ல திட்டம். அதை நான் குறை கூற மாட்டேன். சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கூறியதை அரசு கவனிக்கும்.