Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டுமே புதிய நவீன ரயில்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன” - உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

06:21 PM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதனையை டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என அளிக்கப்பட்ட மனுவில், நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து, தஞ்சாவூர் சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் மாற்றுத்திறனாளி. என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் நாள்தோறும் சந்திக்கும் பல்வேறு இடர்பாடுகளை அறிய முடிகிறது. பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலமாக மட்டுமே பயணிக்கிறேன். அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்டண சலுகையும், அவர்களுக்கு தனியாக இருக்கையும் வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்காக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையை ஆன்லைன் வழியாகவே பரிசோதிக்கும் முறையை 2022-ம் ஆண்டில் சென்னை ரயில் நிலையத்தில் அமல்படுத்தி உள்ளனர். நாட்டின் பல்வேறு ரயில்நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படவில்லை. இதனால் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நடைமுறையை மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் ஆன்லைன் முறையில் பரிசோதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் ஏன் திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பினார்கள். மேலும் பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது. ரயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல், “ரயில்களில் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. விரைவில் முழுமையாக சீரமைக்கப்படும்” என்றார். அதற்கு நீதிபதிகள், வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் தான் புதிய நவீன ரயில்பெட்டிகள்  பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து ரயில்வே தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
disabled peopleHighCourtNews7Tamilnews7TamilUpdatesSouthern RailwaysTrain
Advertisement
Next Article