நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான OTT தளம் - கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான OTT தளத்தை கேரளா அறிமுகப்படுத்த உள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் எண்ணற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்கள் சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 57 ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதம் வெளியான தகவல்.
இந்த நிலையில் இந்தியாவில் டிவி ஆப்பிரேட்டர்கள், இணையதள சேவை வழங்குநர்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து இயங்கும் ஓடிடி ‘அக்ரிகேட்டர்’ நிறுவனங்களின் சேவைக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசுக்கு சொந்தமான OTT தளத்தை கேரளா அறிமுகப்படுத்த உள்ளது. மாநில அரசின் OTT பிளாட்ஃபார்ம் 'சி ஸ்பேஸ்'-ஐ முதல்வர் பினராயி விஜயன் மார்ச் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரம் கைரளி திரையரங்கில் திறந்து வைக்கிறார். கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தலைமை வகிக்கிறார்.
பிரபல திரைப்பட இயக்குநரும், கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (கேஎஸ்எஃப்டிசி) தலைவருமான ஷாஜி என்., உள்ளடக்கம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றின் அடிப்படையில் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவால்களுக்கு சி ஸ்பேஸ் ஒரு பதில் என்று தெரிவித்துள்ளார். .