டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திய ஸ்டேட் வங்கி!
பாரத ஸ்டேட் வங்கி, டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெற்றுள்ளது. கடந்த 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியில், கடந்த 2017 ஆம் ஆண்டு YONO எனப்படும் டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, 6 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன் நாட்டின் மிகவும் நம்பகமான மொபைல் பேங்கிங் செயலியாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கிளாசிக் டெபிட் காா்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்படுகிறது. இந்தக் கட்டணம் யுவா மற்றும் பிற வகை டெபிட் காா்டுகளுக்கு ரூ.175-லிருந்து ரூ.250-ஆகவும், பிளாட்டினம் டெபிட் காா்டுகளுக்கு ரூ.250-லிருந்து ரூ.325-ஆகவும் உயா்த்தப்படுகிறது.