பட்டினியால் இறக்கும் காசா மக்கள் - இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்
காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.
இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.
இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தின.
இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.