வெகுவிமரிசையாக நடைபெற்ற #Srivilliputhur ஆண்டாள் கோயில் செப்பு தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் இக்கோயிலில் மார்கழி மாத உற்சவம், ஆடிப்பூர திருத்தேரோட்டம், பங்குனி உத்திரம் மற்றும் புரட்டாசி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த அக்.4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. அதன்படி, 5ம் நாளான அக்டோபர் 8-ம் தேதி கருட சேவையும், 9-ம் தேதி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் (அக்.10) சயன சேவையும் நடைபெற்றது.
இதன்படி, 9ம் நாளான இன்று (அக்.12) காலை செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி - பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறகு சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி - பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.