Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை தேர்தல் | மக்களை சந்திக்க தயங்கும் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர்?

02:10 PM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று, அதிபராக பதவியேற்றார். அவரது கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சில மணி நேரங்களில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தேர்தல்

இதன்படி, நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்ற தேர்தலும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நவம்பர் 21ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225 ஆகும். இவர்களில் 196 பேர் மக்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமும் தேர்வு செய்யப்படுவர். ஆட்சியமைக்க 113 உறுப்பினர்கள் எண்ணிக்கை தேவையாக இருக்கிறது.

மக்களை சந்திக்க தயக்கமா?

அதிபர் தேர்தல் போலவே பெரும்பான்மைக்கான இடங்களையும் மக்கள் தேசியக் கட்சி பெறுமா? தனிப்பெருன்பான்மை ஒரு கட்சிக்கு கிடைக்குமா? கூட்டணி அமைச்சரவை அமையுமா? தேர்தலுக்கு பிறகு நடக்கப் போவது என்ன? என பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில், இலங்கை அரசியலில் மிக முக்கிய குடும்பமாக பார்க்கப்படும் ராஜபக்சே குடும்பத்தின் சொந்த மாவட்டத்தில் ராஜபக்சேக்களில் ஒருவர் கூட போட்டியிடவில்லை. இந்த தேர்தல் களத்தில் அவர்களது குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் போட்டியிடுகிறார். அவரும் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இதனால், அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் மக்களை சந்திப்பதை தவிர்க்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொஞ்சம் பின்னோக்கி…

இது குறித்து விரிவாக செல்வதற்கு முன், கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்… இலங்கையில் கடந்த 1947ம் ஆண்டு நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இருந்த அரசு சபையில், ராஜபக்சே குடும்பத்தின் முதலாவது அரசியல்வாதியான டான் மெத்திவ்ஸ் ராஜபக்சே பங்கு பெற்றார். அவருக்கு பின்னர் டி.ஏ.ராஜபக்சே நேரடி அரசியலுக்கு வந்தார். தொடர்ச்சியாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வந்தனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இந்த மாவட்டத்தில், டி.ஏ..ராஜபக்சே போட்டியிட்டு வென்றார். கருத்து முரண்பாட்டால், கடந்த 1951ம் ஆண்டு, அக்கட்சியில் இருந்து விலகினார். விலகிய அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்தார்.

மகிந்த ராஜபக்சே வருகை

இலங்கை சுதந்திர கட்சியிலும் முக்கிய தலைவராக திகழ்ந்த டி.ஏ. ராஜபக்சே 1967-ஆம் மறைந்தார். அவரது மறைவையடுத்து, கடந்த 1970ம் ஆண்டு அவரது மகன் மகிந்த ராஜபக்சே நேரடி அரசியலுக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, மகிந்தவின் சகோதரர்களான சமல் ராஜபக்சே, பஷில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோரும் அக்கட்சியில் இணைந்தனர். மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், அதிபர் என அனைத்து பதவிகளையும் வகித்தார். முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

தனிக்கட்சி கண்ட சகோதரர்கள்

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே குடும்பம் அசைக்க முடியாத அரசியல் சக்தியானது. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகினார். தங்களுக்காக கடந்த 2016ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மகிந்த ராஜபக்சே தொடங்கினார். இந்த கட்சியின் சார்பில் 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே களமிறங்கினார். அவர் பெரும் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அக்கட்சி பெற்றது. ராஜபக்சே சகோதரர்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டும் வந்தனர்.

நாட்டை விட்டு ஓட்டம்

இதுவும் இரண்டு ஆண்டுகள் தான் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. இதற்கு ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கம், ஊழல், முறைகேடுகளே காரணம் என தலைவர்கள் குற்றம் சாட்டினர். பல்வேறு அமைப்புகள், மக்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். அங்காங்கே போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கொண்டாடப்பட்ட குடும்பம் விரட்டப்படும் நிலையும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகி, நாட்டை விட்டே தப்பி ஓடினார். இதையடுத்த இரண்டாண்டுகளில், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் மகிந்தவின் மகன் நமல் போட்டியிட்டார். பெரிதும் நம்பிக்கையோடு இருந்த அவர்களுக்கும் படுதோல்வியையே மக்கள் அளித்தனர். நமல் ராஜபக்சே 4ம் இடத்தையே பெற முடிந்தது.

கோட்டையை தவிர்த்த குடும்பம்

இந்நிலையில், வரும் 14ம் தேதி நடைபெறும் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்சே குடும்பத்திலிருந்து ஒருவர் கூட போட்டியிடவில்லை. அவர்களது குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷிந்திர ராஜபக்சே மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, நமல் ராஜபக்சே நேரடி தேர்தலில் போட்டியிடாமல், தேசிய பட்டியல் மூலம் எம்.பியாக முடிவு செய்துள்ளார்.

போட்டியிடாத காரணம்?

நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால், நேரடி தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறும் நமல், ‘’எங்களது குடும்பத்தின் மூத்தவர்கள், அரசியலில் ஓய்வு பெற விரும்பினர். ஆகையால், போட்டியிடுவதையும் தவிர்த்துள்ளனர். அதுமட்டுமின்றி சமல் ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே இருவரும் கடந்த தேர்தலிலேயே இதுவே எங்கள் கடைசித் தேர்தல் என்றும் அறிவித்துவிட்டார்கள். சொன்னபடி தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டனர்’’ என்கிறார்.

ஏதோ திட்டம் இருக்கு…

இது குறித்து இலங்கை அரசியல் விமர்சகர்கள் பார்வையில், ’’மக்கள் மத்தியில் தற்போதைய அதிபரான அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஆகையால், நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே குடும்பம் போட்டியிட்டால் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வளவு எளிதில் களத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதையும் கடந்த எதிர்க்கால திட்டம் ஒன்று அவர்களிடம் இருக்கிறது’’ என்கிறார் இலங்கை பத்திரிகையாளர் ரஞ்சன் அருண் பிரசாத்.

யார் என்ன திட்டம் வைத்திருந்தாலும், ஜனநாயகத்தின் வலிமைமிக்க எஜமானர்களாகிய மக்கள் மனதில் ஒரு திட்டம் இருக்கும். அது என்ன என்பதை தேர்தல் தீர்ப்பாக அவர்களாக தெரிவிக்கும் வரை காத்திருப்போம்…

Advertisement
Next Article