பரவி வரும் உண்ணி காய்ச்சல் - திண்டுக்கல் மக்களே உஷார்!
திண்டுக்கல் மாவட்டத்தில், உண்ணி காய்ச்சல் வெகுவென பரவுவது குறித்து அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த முதியவர் பழனிசாமி (61) என்பவர் கடந்த டிசம்பர் 10-ம் தேதி உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து அதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் உயிரிழந்தார். ஆனால், அவர் இறந்த பிறகு வெளிவந்த பரிசோதனை முடிவில் அவருக்கு உண்ணி காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட இருவரின் சுற்று வட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த சத்தியமேரி (47) என்பவர் 3 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் உண்ணி காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகமடைந்த மருத்துவர்கள் ரத்த மாதிரி சோதனை செய்தனர். நேற்று (டிச. 20) முடிவுகள் வெளியானதில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவருக்கு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செல்வகுமார் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விளக்கம் தெரிவித்தார். அவர், “திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உண்ணி காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருகிறது. உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா ஆகிய அனைத்து நோய்களும் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
திண்டுக்கல்லில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8-க்கும் மேற்பட்ட மக்களுக்குக் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். அதனால் அனைத்தும் கட்டுக்குள்ளே இருக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக மருத்துவமனையை மக்கள் அணுகவும்” என தெரிவித்தார்.