#Uttarakhand - நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழக சுற்றுலாப்பயணிகள்! 15 பேர் மீட்பு!
தமிழ்நாட்டிலிருந்து உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷுக்கு கடந்த 1-ஆம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். இதனைத்தொடர்ந்து உத்தரகாண்ட்டில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களையும் பார்வையிட்டனர். இதற்கிடையே உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 30 பேரும் சிக்கிக் கொண்டனர்.
ஆதி கைலாஷில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பயண வழியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை மீண்டும் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்து வந்தனர்.
இதையும் படியுங்கள் :தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா.. - #TVKVijay
இது குறித்து யாத்திரிகர்கள் சிதம்பரத்தில் உள்ள உறவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதி கைலாஷிலிருந்து யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து நிலச்சரிவு சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது. முதல் கட்டமாக 15 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.