சனாதனம் குறித்த பேச்சு | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்தது. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கவும், உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் இன்று (ஜன.27) விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.