நெல்லையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில் - நவம்பர் 9-ல் துவக்கம்!
திருநெல்வேலியில் இருந்து சீரடி மற்றும் ஜோதிர்லிங்கத் தலங்களுக்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஒரு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளது. இந்த அறிவிப்பை IRCTC-யின் தென்மண்டல பொது மேலாளர் வெளியிட்டார்.
இந்தச் சிறப்பு ரயில், பாரத் கௌரவ் (Bharat Gaurav) என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது. இது நவம்பர் 9, 2025 அன்று திருநெல்வேலியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, எட்டு பகல் மற்றும் ஏழு இரவுகள் கொண்ட பயணமாக நவம்பர் 16-ஆம் தேதி நிறைவடையும். இந்தப் பயணத்தின்போது, பக்தர்கள் சீரடி சாய்பாபா கோவில், நாசிக், சனி சிங்கனாப்பூர், பண்டரீபுரம் மற்றும் மந்திராலயம் ஆகிய புனிதத் தலங்களை தரிசிக்கலாம்.
இந்த ரயில் நெல்லையிலிருந்து புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லும்.
பயணச்சீட்டில் உணவு, தங்குமிடம், கோவில்களுக்குச் செல்வதற்கான உள்ளூர் போக்குவரத்து மற்றும் வழிகாட்டி வசதிகள் ஆகியவை அடங்கும். இந்தச் சிறப்பு ரயில், தென் தமிழக பக்தர்களுக்கு வட இந்தியப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது.