சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்!
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
அதன்படி, திருவாரூர் அருகே பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா வெகு
விமரிசையாக நடைபெற்றது. இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. தொடர்ந்து சரியாக மாலை 5. 20 மணிக்கு சனிப்பெயர்ச்சியடைந்தார். அப்போது மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் சனீஸ்வர பரிகார ஹோமமும், சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கும் சிவசூரியபெருமான் கோயிலில் விஷேச பூஜைகள் நடைபெற்றது. நவகிரகங்கள் தனி தனி
சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் இக்கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயிலின் பிரகார மண்டபத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதையும் படியுங்கள்: தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் – எம்.பி.கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
இதே போன்று மயிலாடுதுறையில் தேவாரப் பாடல் பெற்ற வதான்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை 10 மணி முதல் பரிகார ஹோமமும் மதியம் பூரணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடத்தப்பட்டது. சரியாக 5:20 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்றி, அன்னதானம் செய்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.
அரியலூரில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த கங்கை கொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலையத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலகில் வேறெங்கும் இல்லாத தாமரை பூ வடிவில் உள்ள ஒரே பீடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் புனித நீர் ஊற்றி பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.