தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது! ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்காளை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெற திட்டம்!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும், அண்மையில் மறைந்த சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்திவைப்பதாக குறிப்பிட்டு, அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதில், பல்கலைக் கழக வேந்தர்களாக முதலமைச்சரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, சில மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவர உள்ளார்.அதில், 10 மசோதாக்களை காரணம் எதையும் குறிப்பிடாமல், அனுமதி அளிப்பதை நிறுத்திவைத்திருப்பதாகத் தெரிவித்து, ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று தெரிவிக்கப்பட உள்ளது. அரசியல்சாசன சட்டப்பிரிவு 200-ன்கீழ், மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்போது, அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்வதாக குறிப்பிடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றித் தருமாறு அந்தந்த துறை அமைச்சர்கள் முன்மொழிய உள்ளனர். இதன்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. இதேபோல, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மை பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.