மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25 முதல் தொடக்கம்... யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப்படமால் இருந்தது. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் அன்னை மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 50 இடங்களும் ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் எண்ணிக்கை 135 ஆக உள்ளது. எனவே இந்த மருத்துவ படிப்பிற்கான மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதனை ஏற்ற தேசிய மருத்துவ ஆணையம், சிறப்பு கலந்தாய்வை 25ஆம் தேதி முதல் நடத்தி காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிறப்பு கலந்தாய்வில் பங்கேற்க மருத்துவ கல்வி இயக்குனரகம் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில், தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு வெளியிட்டுள்ள தகுதி பட்டியலில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை முடிந்துள்ள 4 சுற்று கலந்தாய்விலும் கலந்து கொள்ளாத மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.
கலந்தாய்வு நடைபெற உள்ள மருத்துவ படிப்பு இடங்களை மாணவர்கள் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பிறகு கல்லூரிகளுக்கு செல்லவில்லை என்றால் பாதுகாப்பு வைப்பு நிதி ,கல்வி கட்டணம் உள்ளிட்டவை திரும்ப தரப்படாது. மேலும் 1 ஆண்டு காலம் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது எனவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.