”தொடர் விடுமுறையை முன்னிட்டு 23, 24ஆம் தேதிகளில் #SpecialBus” - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கல்வி, வேலை என பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக அன்றாடம் மக்கள் வேறு ஊர்களுக்கு பயணிப்பதும் குடியேறுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதும்வழக்கமான ஒன்றுதான்.
கடந்த வாரம் சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. அந்த வகையில் மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர்.
அதேபோல் இந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி தொடர் விடுமுறை விடப்படுகிறது.
இந்நிலையில், தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 25, 26ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து 23, 24ஆம் தேதிகளில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பிற இடங்களுக்கு 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.